புயல் அடித்து ஓய்ந்திருந்தது.
அப்போதைய ஊரக வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கென ஒரு வாரகாலமாக அங்கேயே முகாமிட்டிருந்தார்.
அப்போது, நான் சென்னை இயக்குநர் அலுவலகத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
அன்று காலை 12.30 மணியளவில் இயக்குநரக மேலதிகாரிகளில் ஒருவரான கூடுதல் இயக்குநர் ஒருவர் என்னை அலைபேசியில் அழைத்தார். அவர் ஒரு பொன்னான அதிகாரி என்று துறையில் பலரிடத்தும் பெயர் எடுத்தவர்.
"முக்கியமான கோப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு போய் கடலுரில் தங்கியுள்ள நமது அரசுச் செயலாளரிடம் கையொப்பம் வாங்கி வர வேண்டியுள்ளது. நானும் இயக்குநரும் தற்போது அலுவலகத்திற்கு கடலுரிலிருந்து காரில் வந்து கொண்டிருக்கிறோம். மாலை சுமார் 6 மணிக்கு தயாராக இருங்கள். நாங்கள் வரும் அந்த காரிலேயே தலைமைச் செயலகம் போய் கோப்பினை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நீங்கள் கடலுர் போக வேண்டும்" என்றார். அதோடு "கடலுரில் இரவு தங்கும்படி வரலாம், அதனால் மாற்று உடைகளோடு தயாராக இருங்கள்" என்றார்.
நான் எதுவும் யோசிக்கவில்லை. உடனே வீட்டிற்குச் சென்று மாற்று உடைகளை எடுத்து வர மின்சார இரயிலில் புறப்பட்டேன். இரயில், பல்லாவரம் நெருங்கிக் கொண்டிருந்தது. கூடுதல் இயக்குநர் அலைபேசியில் வந்தார். "எங்கிருக்கிறீர்கள்?" என்றார். "உடைகள் எடுப்பதற்காக ரயிலில் தாம்பரம் போய்க் கொண்டிருக்கிறேன் சார்" என்றேன்.
உடனே தடித்த குரலில் "உம்மை யார் அலுவலகத்தை விட்டு வெளியே வரச் சொன்னது? உடை எடுத்து வர அலுவலக உதவியாளர் ஒருவரை வீட்டிற்கு அனுப்பி வாங்கி வர சொல்ல வேண்டியது தானே?"
(அப்போதெல்லாம் எனக்கென்று தனியாக அலுவலக உதவியாளர் நியமிக்கப்படவில்லை. மற்றைய உதவி இயக்குநர்களில் இருவருக்கு ஒரு அலுவலக உதவியாளர் உள்ளனர். நிறைய பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த லட்சணத்தில் எந்த அலுவலக உதவியாளரை என் வீட்டிற்கு சென்று துணிமணி எடுத்து வரும் இந்த வேலையை சொல்வது?)
"இப்பொழுது தலைமைச் செயலகத்தில் இருந்து கோப்பினை மாலை 4 மணிக்குள் பெற்றுக்கொள்ள அழைக்கிறார்கள். நீங்கள் உடனே அங்கு செல்ல வேண்டும்" என்றார். நான் புரிந்து கொண்டேன். தலைமைச் செயலகத்தில் சரியாக ஐந்தே முக்கால் மணிக்குள் அலுவலகத்தை இழுத்து மூடி விட்டு, பேருந்து நிறுத்தத்தில் நிற்கிற ஆட்கள் நிறைய பேர். காலையில் அலுவலகத்திற்கு எத்தனை காலதாமதாக வந்தாலும், மாலை ஒரு நிமிடம் கூட அலுவலகத்தை விட்டுத் தொலைந்து விட தாமதிக்காத கடமை வீரர்கள் அவர்கள். அதனால், காலத்தில் வந்து கோப்பினை எடுத்துச் செல்ல நிர்ப்பந்திக்கிறார்கள்.
நான் செய்வதறியாது யோசித்தேன். அவரோ கோபத்தில் அலைபேசியை துண்டித்தார்.
பல்லாவரத்தில் ரயில் நின்று புறப்படும் தருணம்; நான் பதட்டத்தோடு ரயிலில் இருந்து இறங்கினேன். சொல்லப்போனால், பிளாட்பாரத்தில் குதித்தேன் என்பது தான் உண்மை.
மறுநிமிடமே மீண்டும் கூடுதல் இயக்குநர் அழைத்தார். "தலைமைச் செயலகத்தில் 4 மணிக்குள் கோப்பினை வாங்கிட என்ன திட்டமிட்டு இருக்கிறீர்" என்றார்.
"சார், நான் பல்லாவரத்தில் இறங்கி விட்டேன் நான் திரும்ப அலுவலகம் சென்று விடுகிறேன் அங்கிருந்து தலைமைச் செயலகம் சென்று கோப்பினைப் பெற்றுக் கொள்கிறேன்" என்றேன்.
உடனே அவரோ, மறுபடியும் "இரவு தங்குவதற்கு மாற்று உடை இல்லாமல் என்ன செய்வீர்?" என்றார்.
எனக்கும் சுள்ளென்றது. "சார் நான் அதை பார்த்துக் கொள்கிறேன். அது என் பிரச்சனை. முதலில், ஆறு மணிக்கு நீங்கள் வந்ததும் அதே காரில் தலைமைச் செயலகம் போய் கோப்பினை வாங்க சொல்லி இருந்தீர்கள். இரவு தங்க வேண்டும், உடைகளோடு தயாராக இருங்கள் என்றும் சொன்னீர்கள். அதனால் தான் நான் வீட்டிற்கு போக திட்டமிட்டேன். மற்றபடி ஒன்றும் பிரச்சனை இல்லை சார். இப்பொழுது நான்கு மணிக்குள் தலைமைச் செயலகம் சென்று கோப்பினை பெற்றுக் கொள்வேன்" என்றேன்.
இந்த முறை நான் அவர் பதிலை எதிர்பாராமல் நான் அலைபேசியை துண்டித்தேன்.
அடுத்த முக்கால் மணி நேரத்தில் அலுவலகம் வந்து தலைமைச் செயலகம் செல்வதற்காக கிளம்பினேன். அப்போது நிர்வாகப் பிரிவு உதவி இயக்குநரிடம் கேட்டு ஜீப் கேட்டு அதில் 4 மணிக்கெல்லாம் தலைமைச் செயலகம் சென்று விட்டேன்.
அரசு செயலாளரின் தனி உதவியாளரிடம் விஷயத்தை சொல்லி கோப்பினை கேட்டேன். அவரோ, கொஞ்சம் அமருங்கள், இதோ தருகிறோம் என்று சொல்லிவிட்டு அவருடைய அலுவலக உதவியாளரை கூப்பிட்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் என்னை அரசுச் செயலாளரின் அறைக்குள் அழைத்தார்கள். ஐந்து பெரியப் பெட்டிகளில் கோப்புக்களை அடைத்து வரிசையாக கிடத்தியிருந்தார்கள். "இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார் தனி உதவியாளர்.
நான் அதிர்ச்சியானேன். "என்னிடம் கூடுதல் இயக்குனர் சொல்லும் போது ஏதோ அவசரமாக ஒரு கோப்பு என்று தானே சொன்னார் இது என்ன இவ்வளவு கோப்புகளை எடுத்துப் போக சொல்கிறீர்களே?" என்றேன். அதற்கு தனி உதவியாளர் சிரித்தபடி, "உங்கள் கூடுதல் இயக்குநருக்குத் தெரியாது. ஒரு வாரமாக செயலாளர் அலுவலகம் வராததால், அவர் கையொப்பமிட வேண்டிய கோப்புக்கள் இவை. இவற்றை எடுத்துக் கொண்டுதான் நீங்கள் கடலூர் சென்று கையொப்பம் வாங்கிக் கொண்டு திரும்ப வந்து இங்கே கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்" என்றார்.
எனக்கு கோபம் உச்சத்தில் ஏறியது. "அடப் பாவிகளா இது உங்கள் அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலை. நீங்கள் எடுத்துக் கொண்டு போய் உங்கள் செயலாளர் இடம் கையொப்பம் பெற்று வர வேண்டும். சொல்லப் போனால், அதிகாரிக்கு கோப்புகளை மூட்டைக் கட்டி தூக்கிக் கொண்டு போய் அவர் வீட்டில் வைப்பதும் அவை கையப்பமானதும் திரும்ப அலுவலகத்திற்கு எடுத்து வருவதும் அந்த அதிகாரியின் அலுவலக உதவியாளரின் வேலை; இதை சம்பந்தமே இல்லாமல் நான் ஏன் செய்ய வேண்டும், நான் என்ன உங்கள் தலைமைச் செயலக அலுவலக உதவியாளரா?" என என் மனதிற்குள் கேள்விகள். ஆனால் திடுதிப்பென அதை அவர்களிடம் கேட்டு விட முடியாது.
நம் அலுவலக அதிகாரியே நம்மிடம் விளையாடி இருக்கிறார்; இவர்களிடம் கோபித்துக் கொண்டு என்ன பயன்?
சரி, கோப்புகளை கீழே வண்டியில் ஏற்றிக் கொடுங்கள் என்றேன். உடனே அந்தத் தனி உதவியாளர் சீறினார்.
என்னது? கோப்புகளை நாங்கள் ஏற்றிக் கொடுக்க வேண்டுமா? நீங்கள் வரும்போது உங்கள் அலுவலகத்திலிருந்து அலுவலக உதவியாளரை எல்லாம் அழைத்து வர மாட்டீர்களா? இங்கு ஒருவர் தான் இருக்கிறார்! அவர் இந்த வேலையை செய்ய மாட்டார் நீங்கள் தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது வந்த கோபத்தில் நிச்சயம் என் கண்கள் சிவந்து போனதை அவர் பார்த்திருப்பாரோ என்னவோ.?
உடனே, அவரது உதவியாளரை அழைத்து இந்த கோப்புகளை கீழே இறக்கி கொடப்பா என்று சொல்லிவிட்டு விருட்டென அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார்.
அந்த அலுவலக உதவியாளரோ என்னை முறைத்துக் கொண்டு நின்றார். என் மனதிற்குள் "அடேய்… இது உன் வேலையடா. உதவி இயக்குநர் நிலையில் நான் நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லையடா" என நினைத்துக் கொண்டேன்.
அவர் புலம்பிக் கொண்டே ஒவ்வொரு பெட்டியாக தூக்கிக் கொண்டு வந்து லிஃப்டிற்கு அருகில் நிறுத்தி எட்டாவது மாடியில் இருந்து கோப்புகளை இறக்கினார். லிஃப்டில் ஏற்றவும் இறக்கவும் அவருக்கு வேறு வழியின்றி உதவினேன். இதுவே அரை மணி நேரம் ஆகிவிட்டது.
ஒரு வழியாக ஜிப்பில் பெட்டிகளை ஏற்றி விட்டார். ஒவ்வொரு பெட்டியையும் ஒரு ஆளாக தூக்க முடியாத அளவிற்கு கணம்.
ஒரு வழியாக கோப்புகள் அடங்கிய பெட்டிகளோடு இயக்குனரகம் வந்து சேர்ந்தேன்.
அப்போது மணி 4:30. கூடுதல் இயக்குநர் வரும் கார் வந்து சேர இன்னும் ஒன்றரை மணி நேரம் ஆகும்.
அதுவரை இந்தப் பெட்டிகளை நான்காவது மாடிக்கு ஏற்றி இறக்கிட இயலாது. அதைச் செய்வதற்கு என் அலுவலகத்தில் மற்ற ஊழியர்களை அழைத்து இந்த வேலையை சொல்லவும் இயலாது. "முடியாது" என என்னை எதிர்த்துப் பேசி விடுவார்கள். நானே தூக்கிக் கொண்டு போனால் தான் உண்டு. அதை செய்ய என் மனம் ஒப்பினாலும் ஒற்றை ஆளாக என்னால் அந்த பெட்டியை லிஃப்ட்டில் ஏற்றி இறக்கவும் முடியாது. அதனால் பெட்டிகளை போர்ட்டிகோவிலேயே டிரைவர் உதவியோடு இறக்கி வைத்து விட்டேன்.
உடனே அந்த ஜீப் டிரைவர் தனக்கு வேறு வேலை வந்து விட்டதாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.
நான் பெட்டிகளை காவல் காத்துக்கொண்டு போர்ட்டிக்கோவிலேயே நின்று கொண்டிருந்தேன்.
இப்போது கூடுதல் இயக்குநர் மீண்டும் அலைபேசியில் வந்தார். கோப்புகளை எடுத்து வந்து விட்டீர்களா என்றார். ஆம் சார் கோப்புகளோடு நான் தயாராக இருக்கிறேன் நீங்கள் வந்ததும் கிளம்ப வேண்டியது தான் என்றேன்.
அதற்கு அவரோ இல்லை இல்லை நீங்கள் உடனே கோப்புகளை ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டு ஈ.சி.ஆர் ரோட்டில் வாருங்கள் இங்கு ஒரே போக்குவரத்து நெரிசலாக உள்ளது நாம் எங்காவது ஒரு இடத்தில் சந்தித்து கோப்புகளை நாங்கள் வரும் காரில் மாற்றிக் கொண்டு நீங்கள் இப்படியே சென்று விடலாம். நீங்கள் வரும் காரில் நானும் இயக்குநரும் அலுவலகம் போய் விடுவோம் என்றார்.
நானும் என்னுடன் தலைமைச் செயலகம் வந்த ஜீப் டிரைவர் வேறு வேலை இருப்பதாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார் இப்பொழுது என்னுடைய என்னிடம் வண்டி இல்லையே சார் என்றேன். இருப்பினும் AD(Admin)-யிடம் கேட்டு முயற்சிக்கிறேன் என்றேன்.
உடனே கடும் கோபத்தில் ஆவேசமாக கத்தினார், நீர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர் நீ எல்லாம் ஒரு உதவி இயக்குநரா? காலையில் இந்தப் பணியை உம்மிடம் சொன்னேன் அப்போதே ஒரு வாகனத்தை தயார் செய்து நீ வைத்துக் கொள்ள வேண்டாமா (!?) இது என்ன பதில், பொறுப்பில்லாமல்?; இப்பொழுது இங்கே டிராஃபிக் ஆகிவிட்டது. செக்கரட்டரி கோப்புகளை இரவு 9 மணிக்குள் கேட்கிறார். இப்போது என்ன செய்வது என்றார்.
AD-Admin இப்போதைக்கு வண்டி இல்லை என்று கை விரித்து விட்டார். இந்த அலுவலகத்தில் வாகனங்களை ஒதுக்குவது ஒரு அதிகாரி. அந்த அலுவலகத்தில் வாகனங்கள் விஷயத்தில் ஆயிரத்தெட்டு பாலிடிக்ஸ் இருக்கின்றன. அந்த ஊழல்களைப் பற்றியெல்லாம் எதிர்க் கேள்வி கேட்டால், இயக்குநரகம் நாறிப் போய்விடும். உதவி இயக்குநர்களுக்கு என்று தனித்தனியாக வாகனங்கள் கிடையாது. அலுவலகத்தில் இருக்கும் வாகனங்களில் ஒன்றை என் அதிகாரத்தைக் கொண்டு அத்தனை எளிதாக நான் எடுத்துக் கொண்டு போய் விடவும் முடியாது.
கூடுதல் இயக்குநர் திடீர் திடீரென்று திட்டத்தை மாற்றினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? முதலில் மாலை 6 மணி என்றார். மாற்று உடையோடு இரு என்றார். மாற்று உடை எடுக்கப் போகும் போதே ஏன் போனாய் என்றார். ரயிலில் இருந்து பாதியிலேயே இறங்கினால், ஏன் இறங்கினாய் என்றார். முதலில் ஒரு அவசரக் கோப்பு என்றார்; பின்னர் பார்த்தால் ஒரு வாரமாக தலைமைச் செயலகத்தில் சேர்ந்த ஐந்து பெட்டி கோப்புகள். இப்போது நான்கு மணிக்கு டிராபிக்கில் மாட்டிக் கொண்டேன், நீ கிளம்பி எதிரே வா என்கிறார். ஏன் நீ முன்னமே திட்டமிட்டு உன் பொறுப்பில் கார் ஒன்றை வைத்துக் கொள்ளவில்லை என்கிறார்.
நான் அவரிடம் "சரி சார்! நீங்கள் டிராபிக்கில் இருக்கிறீர்கள்; இங்கே நான் இருக்கும் சைதாப்பேட்டையிலும் மவுண்ட் ரோட்டில் பயங்கர டிராஃபிக். ஒருவேளை, இப்போது வண்டி ரெடியாக என்னிடம் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரமாக நானும் வர முடியாதே சார்!" என்றேன்.
அவருக்கு மூளைத் தெறித்து இருக்கும் போல. கூடுதல் இயக்குநர்களை யாரும் இப்படி வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசி இருக்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் வானத்திலிருந்து நேரடியாக குதித்து வந்த கடவுளர்கள். அதனால், வார்த்தைக்கு வார்த்தை என்னுடைய பதில்களை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.
"உமக்கு வாய் ரொம்பவும் நீளம்?" என்றார்.
இதற்கு நான் பதில் சொல்லவில்லை.
"நீர் உம் வாயை நியாயம் தர்மம் இல்லாமல் அடாவடியாய் நீட்டும் போது நானும் என் வாயையும் நியாயத்திற்காகவும் தர்மத்திற்காகவும் உரிமைக்காகவும் உம்மை விட அதிகமாகவே நீட்டுவேன்" என்று சொல்லத் தோன்றியது. என்ன செய்வது, மேலதிகாரியிடம் அதுவும் மேலிருந்து குதித்து வந்த கடவுடளிரிடம் அப்படியெல்லாம் சட்டெனப் பேசிவிட இயலாதே. வழக்கம் போல், சத்தம் போட்டுவிட்டு மீண்டும் அலைபேசியைத் துண்டித்தார்.
அப்போது எனக்கு "அட, முரட்டுக் கோமாளிகளே!" என்று தான் நினைக்கத் தோன்றியது.
ஒரு வாரமாக தலைமைச் செயலகத்தில் அரசு செயலாளர் அறைக்குள் கிடந்த கோப்புகளை சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் கையொப்பமிட்டு துறையின் நிர்வாகத்தையே தலைகீழாகத் தூக்கி நிறுத்துவதான அவருடைய மாபெரும் புரட்சிகாரத் திட்டத்தை நினைத்து நான் எனக்குள்ளே சிரித்துக் கொண்டேன்.
"உங்களிடமெல்லாம் இந்தத் துறை மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறதே! நீரெல்லாம் இத்துறைக்கு பின்னாளில் இயக்குநராக வந்து பொறுப்பேற்றீரானால் இத்துறையை எந்தளவிற்கு உயர்த்தி நிறுத்தப் போகிறீர்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் பீதியாகத் தானிருக்கிறது. அது நீர் போனபின் நிச்சயம் தெரிய வரும், அதை வரலாறு பதிவு செய்யும்" என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டேன்.
அந்தப் போர்ட்டிக்கோவை அண்ணாந்து பார்த்து எனக்குள் நினைத்துக் கொண்டேன், "மாவட்டங்களில் வேலை பார்ப்பவர்கள் இந்த அலுவலகத்திற்கு வரும்போது எவ்வளவு பயபக்தியோடு வருகிறார்கள். இங்குள்ள அலுவலக உதவியாளரிடம் கூடப் பணிந்து போகிறார்கள்.!"
ஏனென்றால், இது துறையின் இயக்குநர் அலுவலகம். மாநிலத் தலைமையகம். வளர்ச்சித் துறையை மாநில அளவில் நிர்வாகம், திட்டங்களை செயல்படுத்துதல், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கையாளுதல், கிராமப்புற மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஊராட்சி நிர்வாகத்தை கண்காணித்தல், செம்மைப்படுத்துதல் என்று எண்ணிலடங்கா இலக்குகளோடு இயங்கிக் கொண்டிருக்கும் மாபெரும் ஒரு அலுவலகம் இது.
இங்கே திட்டமிடுதலிலும் நிர்வாகம் செய்வதிலும் குழப்பம் நிகழ்ந்தால் ஒட்டுமொத்த மாநிலமே தடுமாறும். அந்த மாதிரி சின்னச் சின்ன சாதாரண விஷயத்திற்கெல்லாம் உச்சகட்ட அலப்பறை செய்து திட்டத்தையே பாழாக்கும் சில கூறில்லா அதிகாரிகளிடம் இந்த துறை சிக்கிக் கிடக்கிறது.
கொஞ்ச நேரத்தில் கூடுதல் இயக்குநர் மட்டும் காரில் வந்து இறங்கினார். அப்போது மணி 7:30. ஆக, மாலை 4:30 முதல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தலைமைச் செயலகக் கோப்புகள் அடங்கிய பெட்டிகளை காவல் காத்துக் கொண்டு அந்தப் போர்ட்டிக்கோவிலேயே நின்று கொண்டிருந்தேன்.
கூடுதல் இயக்குனர் காரில் வந்து இறங்கினார். அவர் இறங்கியதும் என் முகத்தைக் கூடப் பாராமல் டிரைவரிடம் "இந்த கோப்புகளை உடனே ஏற்றுங்கள்" என்றார். டிரைவர் கண்ணைக் காட்டி என் உதவியை நாடினார். நானும் டிரைவருமாக டிக்கியில் கோப்புகளடங்கிய பெட்டிகளை ஏற்றினோம்.
"உமக்கு வாய் ரொம்ப நீளம், கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ" என்று எச்சரிக்கையாக சொல்லிக் கொண்டு இன்னும் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டே படியேறி அலுவலகத்திற்குள் சென்றார்; நான் எதையும் பொருட்படுத்தாமல் என் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.
இந்தப் பொன்னான அதிகாரியானவர் ஏன் நம்மை இப்படி புண்படுத்துகிறார் என்று ஒருபுறம் வருத்தமாக இருந்தது.
டிரைவரிடம் "கடலூரில் இருந்து இவ்வளவு தூரம் கார் ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறீர்களே? களைப்பாக இல்லையா? கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து விட்டு வாருங்கள், நான் காத்திருக்கிறேன்" என்றேன்.
அவரோ "அதெல்லாம் வேண்டாம் சார்! நாம் இங்கிருந்து உடனே புறப்பட்டு விடுவோம்; போகிற வழியில் பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லொண்ணா கடமை உணர்ச்சியோடு பேசினார். ஒருவேளை, அதிகாரி அவரையும் அந்த அளவிற்கு பயமுறுத்தி வைத்திருப்பார் போலிருக்கிறது.
இத்தகைய அதிகாரிகள் தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை மனிதர்களாகப் பார்ப்பது கிடையாது; மெஷின்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். மெஷின்களுக்கே அவ்வப்போது ஓய்வு தேவைப்படும். பராமரிப்பு தேவைப்படும். இல்லையென்றால்: ஒரு கட்டத்தில் அதுவும் புட்டுக்கொண்டு நம்மையும் விபத்தாக்கிக் கொன்று விடும்.
வண்டிக்குள் ஏறி அமர்ந்தேன்; கார் இசிஆர் சார்யில் கடலுர் நோக்கி விரைந்தது.
அப்புரம் என்ன நடந்தது?
எல்லாமே சுவாரஸ்யங்கள்!
தொடரும்…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக