Powered By Blogger

09 மே, 2021

ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப.





ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் பதவி உயர்வு பணியிட நியமனங்களுக்காக ரூ. 2 இலட்சம் முதல் ரூ.8 இலட்சம் வரை இலஞ்சம் வாங்கிய கொள்ளைக் கூட்டத்திற்கு மத்தியில் 2015-ல், என்னை அறிந்த மாத்திரத்தில் பைசா செலவில்லாமல் சென்னை ஊரக வளர்ச்சி இயக்குர் அலுவலகத்தில் பணியமர்த்திய ஆளுமை மிக்க அதிகாரி திரு.ககன்தீப் சிங் பேடி, இஆப. 

நியாயமான காரணமின்றி எனக்கான பணி நியமனக் கோப்பு பல மாதங்களாக அங்குமிங்குமாய் பந்தாடப்பட்டு சுற்றிக் கொண்டிருந்த காலம் அது. தலைமைச் செயலகத்தில் இவரை நேரில் பார்த்து முறையிட்ட அடுத்தக் கணம், அவரது அதிரடியான தலையீட்டால் கோப்பு கையெழுத்தாகி நான் சென்னை ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் பணியேற்றமையை மறக்க இயலாது. (அது வரையிலும், அங்கே டெபுடேஷனில் பணியாற்றி வந்தேன்)

சென்னை மாநகராட்சி ஆணையராக சென்னையை தற்போதைய கொரோனா ஆபத்திலிருந்து மீட்டெடுக்கவும் எதிர்காலத்தில் நிஜமாகவே சிங்காரச் சென்னையாக்கிடவும் சிறந்த களம் காண்பார் என நம்புவோம். 

வாழ்த்துகள்!

08 மே, 2021

சுடுகாடா பள்ளிக் கூடமா

 



கலெக்டர் ம.சு.சண்முகம், இ.ஆ.ப., 
முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர், தஞ்சாவூர் 
(பின்னாளில், மாண்புமிகு முதல்வரின் தனிப்பிரிவு செயலாளர்)

அரசுப் பள்ளிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத போது சுடுகாட்டு சுற்றுச் சுவரைப் போய் கோட்டைச் சுவர் மாதிரி கட்டுகிறீர்களே, இது நியாயமா? – தஞ்சை கலெக்டர் எம்.எஸ்.எஸ். கேட்ட கேள்வி

தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும் தற்போது மாண்புமிகு முதல்வரின் தனிச் செயலாளர்களில் ஒருவருமான திரு.எம்.எஸ்.சண்முகம் அவர்களுடனான பசுமையான நினைவுகள்.

தஞ்சாவூர் மாவட்டம் நல்லிச்சேரி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கட்டப்பட்ட சுடுகாட்டுக் கொட்டகையை பார்வையிட்டார் கலெக்டர் எம்.எஸ்.எஸ்.

அப்போது, அதற்கான சுற்றுச் சுவரை வழக்கத்தை விடவும் உயரமாகவும், அகலமாகவும் பெரிய அளவில் கட்டி வைத்திருந்தார் உள்ளூர் ஒப்பந்ததாரர்.  

அந்த ஊருக்கு வந்த கலெக்டர் எம்.எஸ்.எஸ். தற்செயலாக இந்த சுவரை பார்த்து விட்டார். உடனே, அவர் என்னையும் இன்ஜினியரையும் பார்த்து கேட்டார் ஒரு கேள்வி...

என்ன குணசேகரன், பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் எவ்வளவோ உட்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக மேம்படுத்திட இயலாமல் உள்ளோம். நீங்கள், சுடுகாட்டுக்கு போய் கோட்டைச் சுவர் மாதிரி எழுப்பி வைத்திருக்கிறீர்களே...?

அவர் முன் நாங்கள் இருவருமே வெட்கி தலைகுனிந்தோம்.

அப்போது தான் அந்த தவறு எங்களுக்கே உறைத்தது.

சே... எத்தனை பெரிய தவறு செய்ய அனுமதித்து விட்டோம்.  இதை நான் காலத்தில் வந்து பார்க்காததால், கட்டி முடித்தபின் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

ஆனாலும், வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் இந்த மாதிரியான நிலையில் சிந்தித்து செயல்படும் அளவில் நாங்கள் இல்லை என்பதும் ஒருபுறம் சிந்திக்க வேண்டியதாகும். அத்தனை பணிப்பளு. அரசியல்வாதிகளின் தலையீடுகள். ஒப்பந்ததாரர்களின் அடாவடித் தனங்கள். ஆயிரக்கணக்கான பணிகள் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டதால் அனைத்தையும் பார்த்து பார்த்து நிர்வகிக்க இயலாத நிலை. 

எம்.எஸ்.எஸ். சென்றதும் ஒப்பந்ததாரரை அழைத்து கண்டித்தோம். உள்ளூரில் இருப்பதால் சுடுகாட்டுக்கெல்லாம் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, முன்னுரிமை தர வேண்டிய பள்ளி, சத்துணவு அங்கன்வாடி மையங்களை மறந்து விடக் கூடாது என்றோம்.

ஒரு நிமிடத்தில் நம்மை சிந்திக்க வைத்து விட்டார் எம்.எஸ்.எஸ். சுடுகாட்டுப் பணிகளையெல்லாம் மெனக்கெட்டு பார்க்க வேண்டுமா என நினைத்து சொகுசாய் காலந்தள்ளி விட்டுப் போன ஆட்சியர்களோடும் பணியாற்றியாயிற்று.

களப் பணி செய்வோருக்கு எத்தனை சிறப்பான சிந்தனைத் தூண்டலைத் தந்து விட்டுச் சென்றார் கலெக்டர் எம்.எஸ்.எஸ்.  எல்லா கலெக்டர்களும் இப்படியாக மக்களுக்காகவும், நியாயமான பணிக் கலாச்சாரத்தோடும் சிந்திப்பதில்லை. அப்போது எம்..எஸ்.எஸ். இன்னும் உயர்ந்திருந்தார் எங்கள் மனங்களில்.

07 மே, 2021

ம.சு. சண்முகம் இ.ஆ.ப

 


கலெக்டர் ம.சு.சண்முகம், இ.ஆ.ப., 
முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர், தஞ்சாவூர் 
(பின்னாளில், மாண்புமிகு முதல்வரின் தனிப்பிரிவு செயலாளர்)

மாண்புமிகு முதல்வரின் தனிச் செயலாளர்களில் ஒருவரான திரு.எம்.எஸ்.சண்முகம், இ.ஆ.ப. அவர்கள் 2009-10களில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்.

அவரிடம் நேரடியாக பணியாற்றியமை நான் பெற்ற பெரும் பேறு.

அப்போது தி.மு.க ஆட்சி.

அவர் முதல்வரின் (கலைஞர்) தனிப்பிரிவில் பணியாற்றி முதன்முறையாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்கிறார்.

நான் அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கண்காணிப்பாளர். அப்புரம் கொஞ்ச நாளிலேயே எனக்கு வட்டார வளர்ச்சி அலுவலராகப் பதவி உயர்வு வருகிறது.

என்னை தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணி நியனம் செய்து உத்திரவிட்டார். அப்போது, நான் மாவட்டத் தலைமையிடமான தஞ்சாவூரில் பணியாற்றிட விருப்பமில்லாமல் இருந்தேன். மாவட்டத்தின் எந்த மூலையிலும் வேண்டுமானாலும் போடுங்கள், ஆனால் தஞ்சாவூர் மட்டும் வேண்டாம் என்று தான் கேட்டிருந்தேன்.
ஆனால், அவர் என்னை தஞ்சாவூரிலேயே பணியமர்த்தினார்.

இந்த சூழலில் வேண்டா வெறுப்போடு தஞ்சாவூரில் நான் பணியில் சேர்ந்ததும் அன்றைய தினமே மாவட்ட ஆட்சியரை பார்க்கச் சென்றேன்.

அவரோ என் முகத்தைப் பார்க்காமலே, உங்களைப் பற்றி நல்லவிதமாக கேள்விப்பட்டிருக்கிறேன். தஞ்சாவூர்  முக்கியமான இடம். தலைமையிடம் வேறு. நீங்கள் சமாளிக்கக் கூடியவர் என்று அறிந்தேன். அதனால் தான் உங்களை பணியமர்த்தியிருக்கிறேன். போய் வேலையைப் பாருங்கள் என்று மட்டும் சொன்னார்.

யாரையும் அத்தனை சுலபத்தில் காயப்படுத்த மாட்டார். கோபம் வரும். ஆனால், கோபங்களை தனக்குள் விழுங்கிக் கொள்வார். தாங்க முடியாத கோபம் வந்தால், சிரிப்பும் சின்னதாய் கோபமுமாய் பல்லைக் கடித்து ஒரு எச்சரிக்கை செய்வார். அவ்வளவு தான்.

அதைத் தாண்டி யாரையும் அவர் கண்டித்ததில்லை. தண்டித்ததுமில்லை. தவறு செய்வோரை சரியான தரத்தில் முறைப்படி நடவடிக்கை எடுத்திட முனைபவர். 

நேர்மையாளர்களை, நல்ல உழைப்பாளிகளை மிகவும் மதிப்பளித்து நடத்துவார்.

அவருடைய நோக்கம், என்ன பிரச்னையோ அதில் கூர்ந்து நோக்கிய நடவடிக்கையால் (Focused) அப்பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்துவார்.

ஆய்வுக் கூட்டங்களில், தன் பணியாளர்களின் பதில்களை வைத்தே செயல்திறனை மதிப்பிடுவார்.

என்ன பேச வேண்டுமோ, எதற்கு முன்னுரிமை தர வேண்டுமோ அதை மட்டுமே வலியுறுத்தி பேசுவார்.

நான் அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தேன் என்பதில் எனக்குப் பெருமை.

இரண்டு மூன்று சம்பவங்கள்... அவர் ஆகச் சிறந்த கலெக்டர் என்பதற்கு ஆதாரமாக சொல்லலாம்.

தஞ்சாவூரில் நல்லிச்சேரி என்றொரு கிராமம்.

அங்கே ஏதோ வருவாய்த் துறை பணியாக எம்.எஸ்.எஸ் சென்றிருக்கிறார். ஊர்க்கோடியில் ஆதி திராவிடர் குடியிருப்பிலிருந்து பள்ளிக்கு செல்லும் பாதை சேறும் சகதியுமாக இருப்பதையும், அதில் பள்ளி மாணவ மாணவியர் மிகவும் கஷ்டப்பட்டு வருவதையும் பார்த்து விட்டார். உடனே காரை நிறுத்தச் சொல்லி இறங்கி விட்டார்.

நேரில், அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது தான் ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தான் என்பதையும் இதை பல ஆண்டுகளாக யாரும் சரி செய்வாரில்லை என்பதையும் தெரிந்து கொண்டார்.

உடனே அங்கிருந்து என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அந்தக் குடியிருப்பினை ஆய்வு செய்து, குறிப்பிட்ட அந்த சாலையை உடனே சீர் செய்துதார்ச் சாலையாக்க முன்மொழிவினை தனக்கு அனுப்புமாறு உத்திரவிட்டார்.

நான் மறுநாளே இன்ஜினியருடன் ஆய்வு செய்து, மதிப்பீடு செய்து அடுத்த நாளே கருத்துருவுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அளித்தேன்.

அடுத்த ஒருவாரத்தில் அந்தப் பணிக்காக மாவட்ட ஆட்சித் தலைவரின் விருப்ப நிதியிலிருந்து ஒரு கணிசமான நிதியை ஒதுக்கி உத்தரவிட்டார்.

அடிக்கடி அந்தப் பணியின் முன்னேற்றம் குறித்து கேட்டறிவார். ஒரு கட்டத்தில் பணி முடித்ததும், அந்தப் பகுதி பள்ளி மாணவர்கள் பொது மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க வேண்டுமே.

(அந்த பணியை செய்த ஒப்பந்ததாரர் வேண்டுமென்றே காலந்தாழ்த்தியது, அதை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லாததால் நான் அவரிடம் மெமோ வாங்கிக் கட்டிக் கொண்டது தனிக்கதை)

ஒருவழியாக சாலை போடப்பட்டு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

மாவட்ட ஆட்சித் தலைவருக்கென்று வானளாவிய அதிகாரம் உண்டு என்பதில் சந்தேகமேயில்லை. அரசியல்வாதிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஏழை எளிய மக்களுக்காக நினைத்தபடி உதவிட இயலும் என்பது எல்லா ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குமே தெரியும்.

ஆனால், எம்.எஸ்.எஸ். போன்று, உள்ளூர் அரசியல்வாதிகளை பெரிதாய் கணக்கில் கொள்ளாமல், துனிந்து மக்களின் தேவை தான் முக்கியம் என முடிவு செய்து, உதவும் குணம் உள்ளவர்கள் மிகக் குறைவு. அந்த நேரம் வேறு ஆட்சியர் இருந்திருந்தால், அத்தனை சுலபத்தில் அந்த சாலை போடப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.

அரசியல்வாதிகள் தரும் பரிந்துரைகளை மட்டுமே செய்து ஆதாயம் பார்க்கும் அதிகாரிகள் மத்தியில் எம்.எஸ்.எஸ். பெரிய மனிதராய் தெரிந்தார். 

(நினைவலைகள் தொடரும்)

04 மே, 2021

ஆட்சிமாற்றங்களும் தலைவர்களின் பதாகைகளும்




ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் முந்தைய அரசின் முதல்வர் / தலைவர் படங்களை புதிய அரசு பதவியேற்பிற்கு பிறகு எடுத்துவிடுவது வழக்கமான ஒன்று தான்.

ஆனால், சிற்சில சந்தர்ப்பங்களில் இந்நேர்வுகளில் அரசாங்க அதிகாரிகளோடு முரண் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உள்ளூர் அரசியல்வாதிகளால் தகராறுகள் / தர்க்கங்கள் ஏற்படுவதுண்டு.

நான் 2011-ல் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையராகப் பணியாற்றிய போது, தி.மு.க. அரசுக்குப் பின் அ.தி.மு.க. பதவியேற்றது.

பதவியேற்ற நாளுக்கு முன்னமே என் அலுவலகத்தில் இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் படங்கள், அவரின் பொன்மொழிகள் என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் எடுத்து விட்டேன். அதில் எனக்கொன்றும் பாரபட்சமோ வெறெந்த அரசியல் ரீதியான விருப்பு வெறுப்பு சார்ந்த சிந்தனையோ சித்தாந்தமோ கிடையாது. 

ஆனால், என் அறையில், என் இருக்கைக்குப் பின்னே, மத்திய அரசின் மிக முக்கிய திட்டமொன்றிற்கான விளம்பரப் பதாகையொன்றில், அப்போதைய பிரதமர் திரு.மன்மோகன் சிங்கின் படம் ஒரு புறமும் முதல்வர் கலைஞர் படமொன்று மற்றொரு புறமும் பொறிக்கப்பட்டிருந்தன. அவை மிகச் சிறிய அளவிலானவை. மிக அருகில் வந்து உற்றுக் கவனித்தால்  அவை இன்னாருடைய படம் என்பது தெரியும். அந்த குறிப்பிட்ட திட்டமோ நடைமுறையில் பெரியளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் அந்த பதாகையை அகற்ற இயலாது.  அதற்காக முன்னாள் முதல்வரின் படத்தின் நானொரு அதிமுக கட்சிக்காரன் போல் கரி கொண்டு பூசி வைக்க இயலாது. 

அத்திட்டத்தின் சாரம்சங்கள் பொது மக்களுக்கு தெரியவர வேண்டும் என்பதால், அலுவலகத்தின் பொதுவெளி உட்பட பல இடங்களில் ஆங்காங்கே தொங்க விடப்பட்டிருந்தன. அதில் ஒன்று தான் என் இருக்கைக்கு பின்னால் இருந்தது. 

காலை பதினோறு மணியிருக்கும். என் அறைக்குள் திமுதிமுவென்று பத்துப் பதினைந்து அ.தி.மு.க.வினர் வந்தனர். அவர்களில் எவரையும் நான் முன்னரே அறிந்திருக்கவில்லை.

உள்ளே நுழைந்ததும், ஒருவர் என்னிடம் "என்ன பி.டி.ஓ சார்... அம்மா ஆட்சி வந்து விட்டது தெரியுமா? " என்றார்.

அவர் எதற்காக சொல்கிறார் என்பதையறியாமலே நான், "ஆம். அதற்காக என்ன?" என்றேன்.

"அப்படியிருக்க, இன்னமும் உங்களின் இருக்கைக்கு பின்னே முன்னாள் முதல்வரின் படத்தை வைத்திருக்கிறீர்களே" என்றார்.

உடனே நான் சொன்னேன்... "உண்மை தாங்க. அது நடைமுறையில் உள்ள மத்திய அரசின் திட்டம்.  மாநில அரசாங்கமும் நிதி ஒதுக்கீடு செய்து நடைமுறையில் உள்ளது. ஆயினும், அந்த புகைப்படங்கள் அளவில் மிகவும் சிறியவை. பாஸ்போர்ட் அளவை விடவும் சற்றே பெரியவை. நானும் கவனிக்கத் தவறி விட்டேன். நான் அகற்றி விடுகிறேன்.  எப்படியும், புதிய முதல்வர் படம் பொறித்த பதாகை வரத் தானே போகிறது" என்றேன்.

ஆனால், கூட்டத்திலிருந்த ஒருவர் உரத்தக் குரலில் "உங்கள் கையாலேயே எங்கள் முன்பாக இப்போதே அதை அகற்றுங்கள்" என்றார் மிரட்டல் கலந்து.

"சரி. அகற்றுகிறேன், நீங்கள் கலைந்து செல்லுங்கள்" 

ஆனாலும், அவர்கள் விடுவதாயில்லை. சலசலப்பு ஏற்பட்டது. 

கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரையும் "நீங்கள் யார் நீங்கள் யார்?" என்று வினவினேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொன்னார்கள். அதில் ஒருவர் வழக்கறிஞர் பிரிவு என்றார். ஒருவர் வட்டச் செயலாளர் என்றார்.

நான் கேட்டேன்... "என் அலுவலகத்திற்கு முற்றிலும் சம்மந்தம் இல்லாத நீங்கள் எல்லாம் அத்து மீறி என் அலுவலகத்திற்குள் நுழைந்து என் பணியை கெடுத்துக் கொண்டு, அதை வைக்காதே, இதை வைக்காதே என்றெல்லாம் கட்டளையிட உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது?" என்றேன்.

கொஞ்ச நேரத்திலேயே வாக்குவாதமாக முற்றியது. என்னை மிரட்டவும் செய்தார்கள்.

என்னிடம் ஒரு குணம் உண்டு. அடாவடியாகப் பேசும் உயரதிகாரிக்குக் கூட சில சமயங்களில் நிமிடத்தில் கட்டுப்பட்டு விலகிப் போய் விடுவதுண்டு. ஆனால், அரசியல்வாதி என யாராக இருந்தாலும் என்ன பிரச்னை என்றாலும் எத்தகு சூழலிலும் கட்டுப்படாத ஆசாமி நான். வருவதை போட்டுப் பார்த்து விடலாம் என்ற திமிர். 

"தயவு செய்து அனைவரும் வெளியேறுங்கள். இந்தப் படத்தை அப்புரப்படுத்த எனக்குத் தெரியும். நீங்கள் கட்டளையிட்டு நான் அகற்ற மாட்டேன்" என்றேன்.

இதற்குள் என் அலுவலகப் பணியாளர்கள் பலரும் சத்தம் கேட்டு என் அறைக்குள் வந்து, அவர்களை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

அலுவலகத்தினுள் சென்ற அவர்கள், என்ன நடந்ததோ, என்ன பேசினார்களோ சில நிமிடங்களில் திரும்ப என் அறைக்குள் வந்து, எனக்கு கைக் கொடுத்து "பிரச்னை வேண்டாம் சார். சுமுகமாகப் போய்விடலாம்" என்று சொல்லி விட்டு கலைந்து சென்றார்கள்.

அதன்பிறகு, அந்த அலுவலகத்தில் நான் பணியாற்றிய காலம் வரையிலுமே அந்த பதாகையில் உள்ள கலைஞர் படத்தை அகற்றவேயில்லை என்பது வேறு விஷயம். காரணம், அந்த திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது. அந்த பதாகையை அகற்றுமாறு அரசின் உத்தரவு ஏதும் வரவில்லை. புதிய முதல்வரின் படம் போட்டு மாற்று பதாகையும் அச்சாகி வரவில்லை.

இப்படி நடந்தது தான் நேற்றைய அம்மா உணவக சம்பவம்.

பாவம், அம்மா உணவகத்தில் வேலை பார்ப்பவர்கள் எளியவர்கள். அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.

இது குறித்து ஸ்டாலின் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்தார் எனக் கேள்வியுற்று மகிழ்ந்தேன்.