Powered By Blogger
ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 மே, 2022

மறைந்து கிடக்கும் முழுப் பூசனிகள்

ஆஹா...!
சாதனையோ சாதனை!! பாராட்டுக்கள்!!!

மாவட்டத்திலேயே, வானளாவிய அதிகாரம் கொண்ட ஐஏஎஸ் அதிகாரியான மாவட்ட ஆட்சித் தலைவரால், இப்படி கிராம ஊராட்சியின் கடைகோடி ஊழியரான ஊராட்சி செயலர், ஊரக வளர்ச்சித் துறையின் பணியாளர்கள் மற்றும் இன்ன பிற அலுவலர்களை மட்டுமே தண்டிக்க இயலுமே தவிர, நேரடியாக தவறு செய்யும் கிராம ஊராட்சி தலைவரையோ ஆளும் கட்சியோ அல்லது ஆளும் கட்சி சார்ந்த பிரம்முகரையோ தட்டிக்கேட்க கூட இயலாது என்பது காலகாலமாய் எழுதப்படாத சட்ட சாசனம் ஆகும்.

ஆம்.

கிராம ஊராட்சியின் ஆய்வாளரான மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு ஊராட்சியில் ஆய்வு செய்யும்போது அவர் கண்ணுக்கு படுவதெல்லாம் அந்த ஊராட்சியில் கடைகோடி ஊழியரான ஊராட்சி செயலர் பதிவேடுகளை சரிவர எழுதா நிலை மட்டும்தான் போலும்.

அந்த ஊராட்சியின் செயல் அலுவலரும் அந்த ஊராட்சியில் வரவு செலவு கணக்குகள் வங்கிக் காசோலைகளை கையாளும் ஏகோபித்த அதிகாரம் பெற்றவரான ஊராட்சித் தலைவர் எந்த தவறுமே செய்யவில்லையோ அல்லது அவை அந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் கண்களுக்குள் புலப்படவில்லையோ என்னவோ?

நான் இத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றியதில் நான் கண்டது, இம்மாதிரி அதிகாரம் படைத்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆளும் கட்சிக்காரர்களை விட்டுவிட்டு அங்கே யாராவது ஏப்பை சாப்பை இருந்தால் அவர்களை மட்டும் கண்டிப்பது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அதை பொதுவெளியில் ஊடகத்திலும் தன் மேல் அதிகாரிகளிடமும் தானொரு நேர்மையானவர், தவறுகளைக் களைபவர், சிறந்த நிர்வாகி என்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, அதில் குளிர் காய்ந்து கொண்டு பல்லாண்டுகள் அந்தப் பதவியின் சுகத்தை அனுபவிப்பதைத் தான். 

உண்மையில், இந்த ஆட்சியர் அப்படியில்லாமல், தவறு செய்கின்ற நிதிக் கையாடல் செய்கின்ற அரசுத்துறை அலுவலர்கள் கிராம ஊராட்சியின் நிர்வாக அதிகாரியான கிராம ஊராட்சி தலைவர் ஆகியோர் மீது எவ்வித பாரபட்சமுமின்றி எந்த அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காதவராகவும் தண்டிப்பவராகவும் இருந்தால் மகிழ்ச்சியே.

கிராம ஊராட்சி தலைவர்கள் செய்யும் தவறுகளை கண்டுபிடித்து அதற்கான ஆதாரங்களோடு சட்ட விதி எண் 205-ன்கீழ் கிராம ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சில நேர்மையான அதிகாரிகள் அனுப்பும் ஆய்வு குறிப்புகளை பரிந்துரைகளை எத்தனையோ மாவட்ட ஆட்சியர்கள் தன் நாற்காலியில் இருக்கைக்கு கீழே போட்டு (கெட்ட வார்த்தை வரமாட்டேன்கிறது) வருடக்கணக்கில் அமர்ந்து இருந்தவர்களை நான் கண்டிருக்கிறேன். நேரடியாக நானும் அனுபவித்திருக்கிறேன். 

(மாறாக அதே நிகழ்வில் அவற்றுக்கு நேரடித் தொடர்பே இல்லாத பணியாளர்கள் அதிகாரிகள் மீது பழியை போட்டு அவர்களை தண்டித்த கொடுமைகளும் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.)

நான்கைந்து வருடம் கழித்து அங்கிருந்து பணி மாறுதலில் செல்லும்போது அந்த ஆய்வு குறிப்பு சார்ந்த கோப்புகள் குப்பையாக திரும்பி நமக்கே வரும் என்பதே கசப்பான உண்மையாகும்.

என் பணிக் காலத்தில் கிராம ஊராட்சியில் ஆய்வு செய்யும் பதவியில் இருந்தபோது ஊராட்சித் தலைவர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி ஆட்சியருக்கு ஆய்வுக் குறிப்பு அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கோரியபோது, அதே ஆட்சியர் என்னை திரும்ப மிரட்டியதும் தவறு செய்த ஊராட்சி தலைவரிடமே நான் அசிங்கப்பட வைத்ததும் எல்லாம் என் வாழ்வின் கசப்பான பக்கங்கள்.

(பிற்காலத்தில் அந்த ஆட்சியர் சிறைக்கு சென்ற செய்தி என் காதுகளுக்கும் மனதிற்கும் இனிப்பானது என்பது வேறு கதை)

மாவட்ட ஆட்சியர் என்பவர் அந்த மாவட்டத்தில் வானளாவிய அதிகாரம் படைத்தவர் ஆவார். இதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை என்பது திண்ணம்.

ஆனால், அந்த அதிகாரத்தை எல்லாம் ஆளும் கட்சியிடமும் ஆளுமை பெற்ற அரசியல்வாதிகளிடமும் பெரும்பான்மை ஆட்சியர்கள் அடகு வைத்திருக்கிறார்கள் என்பது இன்றளவும் மறுக்கமுடியாத மறைக்க முடியாத உண்மை.