2001-2002.
நான் தஞ்சாவூரில் ஊராட்சிகள் விரிவாக்க அலுவலராக பணியாற்றிய சமயம்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலின் போது நடந்த ஒரு சம்பவம்.
ஒரு சிற்றூராட்சியின் தலைவர் தேர்தல்; அங்கே ஏற்கனவே ஒரு திமுக-வைச் சேர்ந்த தலைவர் இறந்து போனதால் அந்தக் காலிப் பணியிடத்திற்காக நடைபெற இருந்த தேர்தலில் அதிமுகவினர் எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டார்கள்.
அந்த ஊராட்சியில் ஏற்கனவே வார்டு உறுப்பினராக இருந்த அதிமுகவை சேர்ந்த ஒருவர் தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார்.
அவர் செய்த தவறு யாதெனில், உள்ளாட்சி அமைப்பில் ஒரு பதவியில் இருக்கும்போது இன்னொரு பதவிக்கு வேட்பு மனு செய்தால் அது செல்லாததாக ஆகிவிடும்; அதனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விடும்.
இந்நிலையில், திமுகவினர் தங்கள் சார்பில் நன்கு படித்த மக்கள் அபிமானம் பெற்ற ஒருவரை தலைவர் தேர்தலுக்கு நிறுத்திவிட்டனர்.
என் நண்பர் ஒருவர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
தலைவர் தேர்தல் என்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர் தான் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்தார்.
வேட்பு மனு பரிசீலனை செய்யும் நாள் வருவதற்கு முன்பே அவர்களுக்கு தாம் செய்த தவறையும் அதனால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விடும் என்பதையும் தெரிந்து கொண்டு விட்டனர்; உடனே சுதாரித்துக் கொள்ளவும் முயற்சித்தார்கள். ஆளுங்கட்சியில் எப்போதுமே ஒரு வழக்கம் இருக்கும், என்ன பிரயத்தனம் வேண்டுமானாலும் செய்து அவர்கள் நிலைப்பாட்டில் வெற்றி பெற வேண்டும் என்று துடிப்பார்கள்.
அதிகாரிகளும் அவர்களின் ஆட்டத்திற்கு துணை போவார்கள்.
அரசியல்வாதிகள் சட்டத்தை வளைப்பார்கள், உடைப்பார்கள். குழப்பங்கள் விளைவித்து அதிகாரிகளை மிரட்டிப் பணிய வைத்தாவது காரியத்தை சாதிக்க முயற்சிப்பார்கள்.
ஆனால், அந்த நேரம் அவர்களின் துரதிர்ஷ்டம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான என் நண்பரும் நேர்மையாளர் அரசியல்வாதிகளுக்கு அத்தனை எளிதில் பணிந்து விட மாட்டார். அப்போதைய ஊராட்சிகள் விரிவாக்க அலுவலராகிய நானும் எத்தகைய அரசியல்வாதிக்கும் அடி பணியும் ஆள் கிடையாது.
இந்த நேரத்தில் அவர்கள் சதி செய்ய முயற்சித்தார்கள்; என்னவென்றால் பழைய தேதியில் அந்த வார்டு உறுப்பினர் ராஜினாமா செய்ததாக ஆவணங்களை போலியாக தயார் செய்து ராஜினாமா செய்ய வைத்து அவர் தாக்கில் செய்த தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை தகுதி உள்ளதாக ஆக்குவதற்கான முயற்சி அது.
அது முற்றாக கிரிமினல் குற்றச் செயலாகும். வார்டு உறுப்பினர் ராஜினாமா செய்வதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பே அவர் கோரிக்கை மனு அளித்திருக்க வேண்டும். கிராம ஊராட்சி விதிமுறைகளை அனுசரித்து, அதற்கென சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, தீர்மானம் இயற்றி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் ஒப்புதலோடு ராஜினாமா ஏற்கப்பட வேண்டும்.
அதை விட்டு விட்டு, பின்னாளில், போலியாக ஆவணங்களை தயாரித்தும் திருத்தியும் ராஜினாமா செய்ததாக ஒரு கதையை உருவாக்கிட முனைந்தார்கள்.
அப்போது தற்காலிகமாக தலைவர் பொறுப்பில் இருந்தவரும் திமுக சார்புள்ளவர் என்றாலும் அவர் ஆளுங்கட்சியான அண்ணா திமுகவிற்கு அடிமையாகி போயிருந்தார்.
இப்படியொரு திருட்டுத்தனம் நடக்கப் போகிறது என்பது திமுக-வைச் சார்ந்த வேட்பாளருக்கு எப்படியோ தெரிந்து விட்டது.
இன்னொரு முக்கிய விஷயம் யாதெனில் அங்கே இருந்த மற்றைய வார்டு உறுப்பினர்களும் பெரும்பான்மை திமுக வேட்பாளரை ஆதரிக்கக் கூடியவர்கள். அதனால் இவர்கள் என்னதான் பழைய தேதியில் சிறப்புக் கூட்டம் நடத்தினாலும் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக தீர்மானத்தில் கையொப்பமிட மாட்டார்கள்.
அதற்காக அவர்கள் ஒரு சதித்திட்டம் தீட்டுகிறார்கள். எந்த நேரமும் குடிபோதையில் இருக்கும் தற்காலிக தலைவரை குண்டு கட்டாக கடத்திக் கொண்டு போய் தஞ்சாவூர் நகரத்தில் ஒரு வீட்டில் சிறை வைத்து விடுகிறார்கள்.
அதிமுகவின் பெரும் புள்ளி ஒருவர் என்னையும் அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலரான அமரர் திரு சம்பந்தம் அவர்களையும் கடத்தி விடுவதாகவும் சவால் விட்டிருந்தார். (இதன்மூலம் அவர்களின் நோக்கம் என்னவெனில், தேர்தலின் போது இத்தகைய குழப்பங்களை நடத்தி தேர்தலை நிறுத்தி விடலாம் என்பதுதான். இப்படி நிறுத்திவிட்டால் அடுத்த தேர்தலுக்குள் முறையாக வேட்பு மனுவுக்கு தயாராகி விடலாம் அல்லவா?)
திரு சம்பந்தம் அவர்கள் மாறுவேடம் தான் போடவில்லை; பாவம், பணியாளர்கள் பாதுகாப்போடு பயந்து பயந்து அலுவலகம் வந்து கொண்டிருந்தார்.
நானோ, என்னை கடத்திப் பார் என்று அவருக்கு சவால் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் என் பாட்டுக்கு பணி செய்து கொண்டிருந்தேன்.
கூட்டம் நடத்துவதற்கு தேவையான ஆவணங்கள் பதிவேடுகளை அவர் வீட்டில் இருந்து கள்ளத்தனமாக திருடி எடுத்து வந்து அதிலே கூட்டம் நடந்ததாக தீர்மானங்களை எழுதி எல்லா பாடு உறுப்பினர்களின் கையொப்பங்களையும் வேறு ஒருவரை விட்டு போலியாக போடச் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக போலி ஆவணம் தயாரிப்பது தான் அவர்கள் திட்டம்.
இப்படி ஒரு செயல் நடந்தால் ஊராட்சி விரிவாக்க அலுவலரான எனக்குமே ஆபத்து வந்துவிடும்.
இந்த நேரத்தில் நான் தலையிட்டே ஆக வேண்டிய ஒரு கட்டாயம்.
வட்டார வளர்ச்சி அலுவலர் இந்த சிக்கலை அப்போதைய கலெக்டர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களிடம் சொல்லிவிட்டார்.
அவரோ சட்டப்படி என்ன வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்று எங்களை விட்டு விடவில்லை.
மாறாக, அவரது பங்களாவிற்கு எங்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்துகிறார் அதில் எங்களுக்குச் சொன்ன அறிவுரை, கட்சிக்காரர்களிடம் ரொம்பவும் கெடுபடியாக நீங்கள் நடந்து கொண்டு உங்களுடைய நேர்மைத்தனத்தை நிரூபிக்க முயற்சிக்க வேண்டாம்; உங்கள் கையில் என்ன ஆவணம் இருக்கிறதோ அதன்படியே செயல்படுங்கள் என்றார்.
அவர் சிவகங்கையில் பணியாற்றிய போது திரு சிதம்பரம் அவர்கள் எம்எல்ஏவாக வேட்பு மனு தாக்கல் செய்த போது ஏற்பட்ட சட்ட சிக்கலையெல்லாம் உதாரணம் காட்டி பேசினார்.
இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், ஒரு வேலை அவர்கள் ராஜினாமா செய்ததற்கான போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை வேட்பாளர் நீட்டினால் அதை கண்ணை மூடிக்கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான்.
கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் நான் செய்த முதல் வேலை, அரசு வாகனத்தை எடுத்துக்கொண்டு நான்கைந்து பேரை அழைத்துக் கொண்டு தலைவர் பொறுப்பில் இருந்தவரின் வீட்டிற்கு சென்று எல்லா ஆவணங்களையும் கைப்பற்றி அலுவலகம் கொண்டு வந்து விட வேண்டுமென்று அந்த சிற்றூருக்கு விரைந்தேன்.
ஆனால், என் துரதிஷ்டம் எனக்கு முன்பே ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அவர்கள் எல்லா ஆவணங்களையும் தூக்கிக் கொண்டு போனதோடு அல்லாமல் நாங்கள் நினைத்த மாதிரி அந்த தற்காலிகத் தலைவரையும் கடத்திக் கொண்டு போய் விட்டார்கள்.
ஆக, ஆளுங்கட்சி திட்டம் செம்மையாக அரங்கேறியது.
ஆவணங்களை சரியான நேரத்தில் கைப்பற்றாமல் கோட்டை விட்ட நானும், போலியான ஆவணங்களை பார்த்து கண்மூடித்தனமாய் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்த என் நண்பரான உதவி தேர்தல் அதிகாரியும் பயத்தில் தவித்தோம்.
சட்ட ரீதியாக பின்னாளில் எங்கள் மீதும் நடவடிக்கை வரலாம் என்றாலும், எங்கள் நிலை குறித்து அந்த திமுக வேட்பாளரிடம் விளக்கிடத் திட்டமிட்டேன்.
அந்த வேட்பாளரை யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் ரகசியமாக சந்தித்து எல்லா பிரச்சனைகளையும் எடுத்துச் சொல்லி எங்கள் நிலையை புரிய வைத்தேன். இந்த விஷயம் என் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட யாருக்குமே தெரியாது.
அவரோ மெத்தப் படித்தவர் என்பதையும் தாண்டி நாகரீகம் மிக்க மனிதர் என்பதையும், தான் ஒரு சராசரி மோசமான அரசியல்வாதி அல்ல என்பதையும் அவர் அப்போதே நிரூபித்தார்.
பரவாயில்லை சார் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்; இதில் நீங்கள் என்ன செய்ய முடியும் அவர்கள் ஆளுங்கட்சிக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சட்ட ரீதியாக நான் இந்த பிரச்சினையை பார்த்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் உங்களுக்கு சிக்கல் வந்தால் கூட நிச்சயமாக உங்களுக்கு அரசியல் ரீதியாக உதவுவேன் என்றும் வாக்குறுதி தந்தார்.
இந்த சந்திப்பு சரியா தவறா என்று கூட நான் யோசிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை அரசியல் நடத்தி கீழ்த்தரமாக நடப்பவனிடம் நாமும் அதே மாதிரி அரசியல் செய்து அவர்களை வீழ்த்த வேண்டும் என்பது என் கொள்கை. என் பனிக்காலத்தில் இதுபோன்று ஒன்றிரண்டு சம்பவங்களில் அரசியல்வாதியைப் போலவே சூழ்ச்சி செய்து முறியடித்திருக்கிறேன்.
Xxxxxx
வேட்பமான பரிசுகள் என்று நாங்கள் எதிர்பார்த்தது போலவே திமுக வேட்பாளர் எதிரணி வேட்பாளரான அந்த அண்ணா திமுக காரர் பேட் மனு தாக்கல் செய்யும் நாளன்று அவர் வார்டு உறுப்பினராக இருந்தார் என்றும் போலியான ஆவணங்களை தயார் செய்து பின் தேதியிட்டு ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதையும் குறித்து ஆட்சேபனை எழுப்பினார். அவர் கூடவே சில வழக்கறிஞர்களையும் கூட்டி வந்து முறைப்படி வாதிட்டார்.
தேர்தல் விதிமுறைகளின் படி, இரு தரப்பினரையும் நன்றாக வைத்து ஆவணங்களை பரிசீலனை செய்தார்கள்.
திரு ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் குறிப்பிட்டது போல் மேசைக்கு வந்த ஆவணங்கள் அடிப்படையில் வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டோம்.
அந்த அந்த தீர்மானத்தில் வார்டு உறுப்பினர்கள் கையொப்பங்களை போலியாக போட்டதெல்லாம் பின்னாலில் வழக்கு போட்டு நிரூபித்துக் கொள்ள வேண்டுமாம்; இதைத்தான் திரு ராதாகிருஷ்ணன் அவர்களும் எங்களுக்கு பாடம் எடுத்திருந்தார்.
நான் முன்பே திமுக வேட்பாளருக்கு எங்கள் நிலையை ரகசியமாக அவருக்கு எடுத்துரைத்ததன் விளைவாக எங்கள் மீது அவருக்கு கோபம் வரவில்லை; மாறாக தேர்தலில் வென்று காட்டுவேன் என்று களத்தில் இறங்கி வேலை செய்தார்.
தேர்தல் சென்சிட்டிவாக இருக்கும் என்ற நோக்கோடு காவல்துறைக்கு புகார் அளித்திருந்தோம். போலீஸ் பாதுகாப்போடு நாங்கள் எல்லோரும் அந்த கிராமத்தில் தேர்தல் பணி செய்தோம்.
ஒரு வேடிக்கை என்னவென்றால், கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனமான வஜ்ரா என்ற வாகனத்தில் தான் நானே பயணித்து அன்று அந்த ஊரில் சென்று இறங்கினேன்.
தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்; தில்லு முல்லு செய்து குறுக்கு வழியில் பதவிக்கு வர துடித்த அந்த கூட்டம் படுதோல்வி அடைந்து தலையை தவிர்த்துக் கொண்டது.
பின்னாளில் அந்த திமுக சேர்ந்த புதிய தலைவர் எனக்கு நண்பர் ஆனார், இன்றளவும்.
இதை ஏன் இந்த நேரத்தில் சொல்கிறேன் என்றால், சமீபத்தில் சென்னை மாநகராட்சி அண்ணா நகர் டவரில் ஒரு நிகழ்வில் தகராறு செய்த அரசியல்வாதியிடம் தனது அதிகாரத்தையே மறந்து போய் கட்டணத்தை நானே செலுத்தி விடுகிறேன் என்றாரே!
இப்போதெல்லாம் அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் கடுமை காட்டி அதிரடி செய்வதெல்லாம் அந்தக் காலம்.
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி யாராக இருந்தாலும் அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் போய்விட்டதை நினைத்தால் எதிர்காலத்தை நினைத்து பொதுமக்களாகிய நமக்கு பயமாகத்தான் இருக்கிறது.
