Powered By Blogger

11 டிசம்பர், 2022

தொங்கும் மாண்பு



சென்னையில் நேற்று மான்டஸ் புயலுக்குப் பிறகு நிவாரண பணிகளைமாண்புமிகு முதல்வர் பார்வையிட வந்த போது, மாண்பமை மாநகர மேயர் ப்ரியாவும், சீனியர் ஐஏஎஸ் அதிகாரியான ககன் தீப் சிங் பேடியும் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி வந்ததை பல்வேறு கோணத்தில் விமர்சிக்கவும் ஆதரிக்கவும் முட்டுக் கொடுக்கவும் செய்தார்கள்.

சில தோழர்களின் பக்கத்தில் நானும் என் கருத்தை பதிவு செய்திருந்தேன்.

என் பார்வையில், அவர்கள் இருவரும் தொங்கிக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என்று தான் சொல்வேன். என்னதான் முதலமைச்சர் வருகையாக இருந்தாலும் அவருக்காக இப்படி ஆபத்தான முறையில் பணி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

அவர்கள் இருவரும் மற்றொரு காரில் முதல்வரின் வாகனத்தை ஒட்டியே பின் தொடர்ந்து வந்து சாவகாசமாகவே பணிகளை செய்யலாம்.

இதே நிகழ்வில், ஒருவேளை உதயநிதி ஸ்டாலின் மேயராக இருந்து இப்படி கான்வாய் வாகனத்தில் தொங்கிக் கொண்டு வந்திருப்பாரா என்பதும் என் கேள்வி.

இதைப் பார்த்ததும் என் பணிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.

பொதுவாக விஐபி விசிட் என்றாலே கீழிருக்கும் அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் சில சமயம் மிகவும் நெருக்கடியான பணிச்சூழலை உருவாக்கி விடும்.

இதே திரு.ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ் அவர்கள் சென்னையில் எங்கள் துறையின் இயக்குனராக இருந்தபோது வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிடுவதற்காக தஞ்சை வந்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியரின் கீழ் இயங்கும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கண்காணிப்பாளராக இருந்தேன். சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு தொடர்வண்டியில் வந்த அவரை வரவேற்பதற்காக எங்கள் திட்ட இயக்குனர், நான் மற்றும் சில பொறியாளர்கள் அதிகாரிகளோடு தஞ்சை ரயில் நிலையத்தில் காத்திருந்தோம்.

மேலதிகாரிகளை வரவேற்று உபசரித்து அவர்களை திரும்ப ஊருக்கு அனுப்பி வைப்பது வரை கொஞ்சம் சென்சிட்டிவ்வாகவே இருக்கும். ரயிலும் வந்தது; ஆனால் அவர் பயணித்து வந்த பெட்டி நிற்கும் இடத்தை சரியாக கணிக்காமல் தள்ளி நின்று விட்டோம். வண்டி எங்களை கடந்து சென்ற பெட்டியில் அவர் நிற்பதை பார்த்து விட்டோம். ஆனால் வண்டி சற்று வேகத்துடனையே ஓடிக் கொண்டிருக்கிறது.

என் அதிகாரிக்கோ சரியான இடத்தில் நின்று அவரை வரவேற்க தவறிவிட்டோமே என்ற பதட்டத்தோடு பிளாட்பாரத்தில் ஓட ஆரம்பித்தார். அதிகாரி ஓடுகிறாரே என அவர் பின்னால் நானும் ஓடினேன். என் பின்னால் பொறியாளர்கள் சில உயர் அதிகாரிகளும் மூச்சிரைக்க ஓடி வருகிறார்கள்.

எனக்கு அப்போது உண்மையில் கோபம் தான் வந்தது, இது ஒன்றும் பெரிய தவறு இல்லையே. ககன்தீப் சிங் பேடி அவர்களும் இதை தவறாக எடுத்துக் கொள்ளும் ஆள் கிடையாது.

வண்டி நின்ற இடத்தில் அவர் இறங்கி பெட்டியோடு நிற்கப் போகிறார். ஒன்றிரண்டு நிமிடத்தில் அவரை சந்தித்து பெட்டியை வாங்கிக் கொண்டு அவரை அழைத்துச் செல்ல போகிறோம். இதில் ஏன் எங்கள் அதிகாரி இத்தனை பதட்டம் கொண்டார் என்று எனக்குள் கேள்வி எழுந்தது.

ஆயினும் மூச்சிரைக்க ஓடிப்போய் அவர் பெட்டியின் கதவருகே நின்றோம்; திரு பேடி அவர்கள் புன்னகையோடு எங்களைப் பார்த்து "குட் மார்னிங் ..." என்றார்! எங்கள் அதிகாரிக்கு நிம்மதி வந்தது. எங்களுக்கும்தான். பெட்டியை வாங்கிக் கொண்டு அவரை அழைத்து வந்தோம். விருந்தினர் மாளிகையில் அறையில் தங்க வைத்து காலை டிபன் அளித்தது உட்பட எல்லா விருந்தோம்பலையும் செவ்வனே செய்தோம்; அவரும் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு இரவு மகிழ்வோடு ஊருக்கு திரும்பினார்.
... ... ...
அதன் பின்பு, அவர் அரசு செயலாளராக ஆன பிறகு நான் இயக்குனரகத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அப்போது, ஒரு முறை கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ள நிவாரணப் பணிகளின் போதும் ஒரேயொரு முறை அவரோடு காரில் பயணித்திருக்கிறேன்.

சீனியர் அதிகாரி என்கிற ஆடம்பரம் அதிகார தோரணையின்றி, சாதாரண பணியில் இருந்த என் போன்றவர்களிடம் இயல்பாக பழகியதை உணர்ந்திருக்கிறேன். பல விஐபிகள் இப்படி அரசு பணிக்காக மாவட்டங்களுக்கு வரும்போது அறை சரியில்லை, சாப்பாடு சரியில்லை, கார் சரியில்லை, அது சரி இல்லை இது சரி இல்லை என்றெல்லாம் குற்றம் குறைகளை மனதில் கொண்டு கீழ்நிலை அதிகாரிகளையும் பணியாளர்களையும் பாடாய் படுத்தியவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

அவர்களுக்கு மத்தியில் திரு கதன்தீப் சிங் பேடி அவர்கள் ஒரு பக்குவமான அதிகாரி என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். மேயரை விடுங்கள், அவர் கட்சிக்காரர் அவர் காலில் கூட விழட்டும்; காரில் தொங்கட்டும். அது அவர்கள் பாடு.

சீனியர் ஐஏஎஸ் அதிகாரியான பேடி அவர்கள் இப்படி கான்வாய் வாகனத்தில் தொங்கிக் கொண்டு வந்ததை என்னால் சற்றும் ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.

முதல்வரோடு கூடவே பயணித்து அவருக்கு விவரங்களை எடுத்துச் சொல்ல வேண்டிய பணிக்கான திட்டமிடலில் இவ்வாறான குளறுபடி எப்படி நடந்தது என்று தான் புரியவில்லை.

முதல்வர் பாவம் என்ன செய்வார்.  அவருக்கு இதையெல்லாம் கண்டுகொள்ளவும் பொருட்படுத்தவும் நேரமில்லை.  கண்ணில் பட்டாலும் அது பற்றி வினையாற்றிட இன்றைய பதவி மாண்பு இடம் கொடுப்பதில்லை.  நாம் என்ன, கர்மவீரர் காமராசர் காலத்திலா இருக்கின்றோம்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக