Powered By Blogger

11 ஜனவரி, 2023

ஆளுநரின் உரை அரசின் உரையே !



வ்வொரு ஆங்கில புத்தாண்டு பிறக்கும் போதும் அந்த ஆண்டின் துவக்கத்தில் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் கவர்னர் உரையோடு துவங்குவது மரபு.


அப்படித்தான் ஜனவரி 2023 சட்டமன்ற கூட்டத்துடன் கவர்னர் உரையோடு
துவங்கியிருக்கிறது. அதற்கென, மேதகு கவனர் அவர்களின் சட்டப் பேரவையில் வாசிப்பதற்கென்றே, அரசின் கொள்கை, செயல்படுத்தப்படும் திட்ட விவரங்கள், பிரத்யேகமாக சில திட்டங்கள் மீதான சாதனை குறித்த புள்ளி விவரங்கள் என கிட்டத்தட்ட அனைத்துத் துறைகயையும் உள்ளடக்கி ஓர் உரை தயாரித்தளிக்கப்படும். அந்த உரை என்பது அந்தந்த துறைகளின் இயக்குநகத்தில் முதலில் வரைவாக தயாரிக்கப்பெற்று  பின்னர் தலைமைச் செயலகத்தில் அந்தந்த துறை செயலாளர்களால் இறுதி வடிவம் அளிக்கப்பெற்று முழுமையான தொகுப்புரையாக மேதகு ஆளுநர் அவர்களின் அலுவலகத்திற்கு அளிக்கப்படுகிறது.  இந்த உரை அந்தந்த துறைகளின் இயக்குநரகத்தில் இரண்டொரு மாதம் முன்பாகவே தயாரித்தளிக்கப்படுகிறது. 


நான், சென்னை ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் பணியாற்றியபோது, சட்டமன்றத்திற்கான பல்வேறு அறிக்கைகள் தயாரிக்கும் பணிகளில் செயலாற்றி உள்ளேன்.  இந்த கவர்னர் உரைக்காக அத்தனை பிரக்ஞயோடும் கவனத்துடனும் பங்களிப்பு அளிக்க வேண்டியிருக்கும். தலைமைச் செயலகத்திற்கு செல்லும், அந்த அறிக்கையை இயக்குநர் அத்தனை சுலபத்தில் ஒப்புதல் அளித்து விட மாட்டார்.  அதன்பின், தலைமைச் செயலகத்தில் துறையின் செயலாளர் மட்டத்தில் அவ்வறிக்கை குறித்து அனைத்து அலுவலர் மட்டத்தில் கூட்டம் / விவாதம் நடத்தியே இறுதி செய்வார். 

 

பல்வேறு தர்பார் நடவடிக்கைகளுக்குப் பின்னர், இறுதி வடிவம் பெற்ற பின்பே, அந்த அறிக்கை மேதகு ஆளுநர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அதை ஆளுநருக்கு உயர்மட்ட அளவில் மேல்நிலை அலுவலர்களால் விளக்கி சொல்லப்பட்டு அவரது மேசையில் அவ்வறிக்கை இறுதி படிவம் பெறுகிறது.  அதில் மாற்றங்கள் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமாயினும் அதை செய்வதற்கு ஆளுநருக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்பது என்னவோ உண்மை. ஆனால், அவை அரசின் கொள்கைகளுக்கு அமைவதானாலும், இரு தரப்பிற்கும் முரண் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. இப்போது நடந்த நிகழ்வை காணும் போது ஆளுநர் உரையை வாங்கிக் கொண்டு அப்போதைக்கு எதுவும் சொல்லாமல் கமுக்கமாக இருந்துவிட்டு கூட்டம் நடக்கும் போது உரையில் இருந்தவற்றை தன் இஷ்டப்படி மாற்றியும் திருத்தியும் சில வரிகளை தவிர்த்தும் இருக்கிறார். 


இதோ இது அவரது சாமர்த்தியம் என்பது போல் அவர் தரப்பில் நினைத்துக் கொண்டிருக்க கூடும். இது உண்மையில் வியப்பிற்கும் நகைப்பிற்கும் உரியதாகும்; இதை சிறுபிள்ளைத்தனமான செய்கை என்றும் கூட சொல்லலாம்.  

 

கவர்னர் உரை உட்பட அமைச்சர் முதலமைச்சரின் சில சிறப்பு அறிக்கைகள் அரசின் கொள்கை விளக்க குறிப்பேடு போன்றவை முன்கூட்டியே பல கட்டத்தில் இறுதிசெய்யப்பட்டு அச்சு வடிவில் அவைக்குள் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே அளிக்கப்பட்டிருக்கும். 


தமிழ்நாடா தமிழகமா?


தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று அழைக்கலாம் என்று ஒரு விபரீதமான சர்ச்சையை இரண்டு நாட்களுக்கு முன் உருவாக்கி வைத்து விட்டு தான் சட்டசபைக்குள் சென்று இருக்கிறார். அங்கே பெரும்பாண்மை உறுப்பினர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் அவரே உருவாக்கிக் கொண்டது தான்.

பிறகென்ன, உரிமை மீறல் பிரச்னை, அவை மரபை மீறியது என பல்வேறு சர்ச்சைகளுள் மேதகு ஆளுநரே சிக்கிக் கொள்வது மாநில மக்களையும் ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயல் தானன்றி வேறென்ன சொல்ல.

அரசின் கொள்கை, திட்டங்களின் விளக்கக் குறிப்பு ஆகியவற்றையே திரும்பத் திரும்ப பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றும் அரசுக்கு அவையில் பிரதானமாய்   வீற்றிருக்கும் ஆளும் கட்சியின் ஆதிக்கத்தையும் ஏற்கெனவே ரப்பர் ட்டாம்பு என விளிக்கப்பட்ட ஒரு ஆளுநரால் முன்னரே தயாரித்ததளிக்க அறிக்கையை தன்னிச்சையாய் மாற்றியும் வெட்டியும் வாசித்தல் தவிர வேறென்ன செய்ய இயலும்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக